Thursday, April 17, 2008

நினைவுகள்

இருட்டிய பொழுதுகளில்

மட்டுமே நான் வெளிச்சமிடுகிறேன்

நிலவல்ல,

இவள் நினைவுகள்

Monday, January 7, 2008

ஹைக்கூ....

* வார்த்தைகளற்ற
வலியின் மொழி
அழுகை!


* இழப்பதற்கேதுமில்லை
உண்ணாவிரதம்
உணவு வேண்டுமென்று!


* வடிவமைக்கிறேன்
அவனால்
என் கல்லறையை..


* கரு தான்
நிரந்தரமாய்த் தங்குவதில்லை
ரகசியங்கள்!


* வருமானம்
வட்டியாகிறது
கடனில் படித்ததால்!


* வெற்றிக்கு முன்
மாதிரியாட்டம்
கனவு!


* பிறந்த இடம்
வருமெனக் காத்திருக்கிறது
பறவையிழந்த கூடு!

இருட்டு....

எனக்கு மிகவும் பரிட்சயமானது!
தாயின்
கருவறை தொடங்கி...

வார்த்தைக்குள் சிக்காத
ரணங்களின் முனகல்
எனக்கு மட்டுமே கேட்கும்
அசரிரீ!

பருவம் கடந்த
உணர்வுகளில்
பதுக்கிக் கொள்கிறேன்
"அடுத்தவங்க பாத்தா
தப்பா நெனப்பாங்க"

விழிதேடும் விரசங்களில்
நீள்கின்றன
என் உணர்ச்சிகளின்
நகங்கள்.....

கருவறையின்
கதகதப்பைத் தாண்டி
உணர்வுகளின்
கதகதப்போடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இருட்டில்.....

திரை விலக்கி

இருபது ஆண்டுகளாய்
இறுக்கப்பட்ட தசைத் தொகுதி
தகித்துக் கொண்டிருந்த உணர்ச்சி
வீரிடுகையில்
கற்பென்ற கற்பிதமெல்லாம்
காணாமல் போய்விடுகிறது,
பால்பேதமின்றி
யாரும் அறியாமல்!

"பொண்ணுனா அடக்கமா இருக்கனும்"
அடங்கிவிடுகிறது
இதில் அனைத்துமே!

சார்புயிரியாய் எத்தனைக் காலம்?
எனக்காக ஓர் நாள்
என் ஆசைக்கு உயிர் கொடுத்து
என் உணர்ச்சிக்கு
விடுதலை கொடுக்கிறேன்....

என்னோடமொழி செத்துப் போச்சி

என்னோடமொழி செத்துப் போச்சி
அதோட எச்சம் கூட
இப்ப என்கிட்ட இல்ல,
ஆனா
ஏராளமான மொழி
இன்னக்கி எனக்குத் தெரியும்.
என்னோடமொழி செத்துப் போச்சே
இப்ப என் மொழிக்கும்
செம்மொழி அங்கீகாரம்
கொடுப்பீங்களா?
ஆனா
பதிவேதும் இல்லையே!
என் மொழியவச்சி
எனக்கு ராகம் போடத்தெரிஞ்சதே
தவிர,
கவிதை பாடத் தெரியல
எப்படி நிரூபிப்பேன்
என்னோட மொழிப் பழமைய
ஒருவேள,
என் அம்மாவுக்கு நெனவிருக்குமா?
எங்கபோயி தேடுவன்
என் மொழிய
உறவுகளுக்காய்
உருமாறிக் கொண்டது
என் மொழியும்!
எல்லா மொழிய விட
தமிழ் மொழிதான்
சிறந்ததுன்னு சிலர்
சொல்லறாங்க,
நறைய பணம் சம்பாதிக்கணும்னா
இங்கிலீசு நல்லா பேச தெரியனும்,
அப்படி இப்படினு
எல்லா மொழிக்கும்
ஏதோ ஒரு அடையாளம், சிறப்பு
சொல்லறாங்க
அப்ப என்னோட மொழிக்கு?
பரிணாம வளர்ச்சியில்
வால் எலும்பான
மிச்சம் கூட
என் மொழியில இல்ல
எங்க போச்சி?
என்ன ஆச்சி?
தெரியல
ஆனா ஒன்னு
நான் வளந்துட்டேன்.
எனக்கும் என் தாய்க்குமான
கருத்துப் பரிமாற்றத்தில்
உருக்கொண்ட
என் மொழி
கருவிலேயே கருகிடுச்சி!
ஒருவேள
இவளுக்குப் பொறந்தது
பொம்பள மொழியோ?

Friday, January 4, 2008

நான்

கதகதப்பைத் தேடி
தகித்துக் கொண்டிருந்த
காமத்தின் வீரியத்தில்
தனிமைதேடி அலைகிறதென் மனம்
திருமணத்திற்கு முன்பு வரை
சக நண்பர்களுடன் பேசுகையில்
"பொம்பள பொண்ணா அடக்க
ஒடுக்கமா இருக்காளா பாரு
வரவன் போரவன் கிட்டெல்லாம்
பல்ல இளிச்சிட்டு..."
என்னும் அம்மா
இப்போதெல்லாம்
"அவரு அப்படி இப்படி இருந்தாலும்
நீதான் அட்ஜஸ் பண்ணி
அவர சந்தோஷபடுத்தனும்"
என்னும் அறிவுரையோடு
(காமக்)களம் இறக்குகிறாள்
வயதின் பசியைத் தீர்த்துக் கொள்ள
வார்த்தைகளால் கூட விளையாடாதவள்
இன்றோ,
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட
உனக்கான உணவு நான்.
பக்தியில் அழிக்கப்பட வேண்டிய
'நான்' போல்
நான் இருப்பதே இல்லை
வாழ்வின் கடைசி வரை
இப்போது எங்கே இருக்கிறான் இறைவன்
நான் அழிந்து வாழும் எனக்கு
காட்சி அளிக்கச் சொல்
அவனை அடையாளப்படுத்தி
அடக்கிய உங்களுக்கு
அடையாளப்படுத்துகிறேன்
"நான்" யாரென்று.

அங்கீகாரம்

கனவுகண்டே கழித்த காலங்களும் உண்டு
இப்பொழுதெல்லாம்
பொழுதுகளை நான் கழிப்பதேயில்லை.
இறந்த என் கனவுகளை
தோண்டி எடுக்கவோ
கனவுகளைக் காணவோ
எனக்கு நேரமிருப்பதில்லை
ஆசை ஆசையாய்
படித்த தமிழ் இலக்கியங்களை
மறுவாசிப்பு செய்யவோ,
என் அறிவினை எதிர்கால இந்தியாவோடு
பகிர்ந்துகொள்ளவோ
எனக்கு நேரமிருப்பதில்லை.
தமிழுக்குக் குரல்கொடுப்பேன்
என்ற போராட்ட வசனங்களையெல்லாம்
இன்று உச்சரிக்கவும்
மறந்துவிடுகிறேன்.....
அட்டவணை வாழ்க்கையில்
இயந்திரமாகிவிட்டேன்
ரேஷன் கார்டில்
குடும்பத் தலைவியான பிறகு.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator